Saturday, September 21, 2024

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: கோவையில் இன்று டிரோன்கள் பறக்க தடை

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதுதவிர செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம், வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கோவைக்கு முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக RED ZONE (NO FLY ZONE) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே குறிப்பிட்ட பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை டிரோன்கள் இயக்க அல்லது பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி கோவை உக்கடம், அவிநாசி சாலை, திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024