முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

சென்னை,

சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா, ஆசிரியர் கல்வி திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் சமக்ர சிக்ஷா அபியான் (முழுமையான கல்வி திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ஆனால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாக தெரிவித்தனர்.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விரைவாக நடைபெறுவதற்கு தற்போது மத்திய அரசு நிதி அவசரமாக தேவைப்படுகிறது. இது குறித்து பிரதமரை நேரில் சந்தித்து, நிதி வழங்க வலியுறுத்த இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. நாளை 27-ந் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

You may also like

© RajTamil Network – 2024