முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களை உறுப்பினருமான சி.வி. சண்முகம், தனக்கு செல்லிடப்பேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையத்தில் 21 புகார்கள் அளித்தும் திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக மதுஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதாக போலியான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்து ஒரு மாதமாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், இது குறித்து கேட்பதற்கா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியில் சென்று இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

இதையும் படிக்க |சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

தான் வருவதாக தெரிந்தும் வேண்டுமென்றே வெளியே சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை சந்திக்கும் வரை தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், நான் கொடுத்த புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியவர், வழக்குரைஞர், முன்னாள் அமைச்சர், தற்போது மாநிலங்களவை உறுப்பினரான எனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தர்னா போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கேட்டுகொண்டபோதும், தர்னா போராட்டத்தை கைவிட மறுத்ததால் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்துள்ளனர்.

இதனால் விழுப்புரத்தில் அதிமுகவினர் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024