மும்முறை தாண்டலில் மூன்று தங்கம்! – சாதனைக்கு இன்னொரு பெயர் சனயேவ்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மும்முறை தாண்டலில் மூன்று தங்கம்! – சாதனைக்கு இன்னொரு பெயர் சனயேவ்ஒலிம்பிக்கில் மும்முறை தாண்டலில் தொடர்ச்சியாக மூன்று தங்கம் வென்ற ரஷிய வீரர் விக்டர் சனயேவ் குறித்து…விக்டர் சனயேவ்படம் | பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் மும்முறை தாண்டும் டிரிபிள் ஜம்ப் போட்டியும் ஒன்று. ‘ஹோப் ஸ்டெப் ஜம்ப்’ என்பது இதன் செல்லப்பெயர். ஒருகாலில் தாவி நிலம்பதித்து, மறுகாலில் ஒரு குதித்து, பிறகு இரு கால்களாலும் தாவி தரையிறங்கும், ஒருவகை நீளம் தாண்டு போட்டி இது.

ஒலிம்பிக் மும்முறை தாண்டும் போட்டியில் ஒருமுறை வெற்றிபெறும் வீரர் அடுத்த ஒலிம்பிக்கிலும் வாகைசூடும் ஓர் அதிசயம் நடந்து வந்தது. எடுத்துக்காட்டாக 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வென்ற பிரேசில் வீரர் அடமெர் பெரைய்ரா டி சில்வா, 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் போட்டியிலும் வென்றார்.

அதேப்போல, 1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் வென்ற, போலந்து நாட்டு வீரர் ஜோசப் ஸ்மிட், 1964 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் வென்றார். இந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ரஷிய வீரர்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆனால் தங்கம் மட்டும் எட்டாக் கனவாகவே இருந்தது.

இந்தநிலையில், இருமுறை ஒலிம்பிக் தங்கம் வென்ற போலந்து வீரர் ஜோசப் ஸ்மிட், மும்முறை தாண்டும் போட்டியில் முதன்முறையாக 17 மீட்டர் தொலைவைத் தாண்டிக் கடந்து புதிய சாதனை புரிந்தார். அவர் தாண்டிய தொலைவு 17.03 மீ.

இந்தநிலையில் 1968 மெக்சிகோ ஒலிம்பிக் போட்டி வந்தது. போலந்து வீரர் ஜோசப் ஸ்மிட் மூன்றாவது முறையாக தங்கம் வெல்லும் முடிவுடன் களமிறங்கியிருந்தார். பிரேசில் நாட்டு வீரரான நெல்சன் புருடென்சியோ தங்கம் வெல்லும் வாய்ப்புள்ள இன்னொரு மிகச்சிறந்த வீரராகக் கருதப்பட்டார்.

இவர்களைத் தவிர செனகல் நாட்டின் மாமது மன்சூர் தியா, ஆஸ்திரேலியாவின் பில் மே, அமெரிக்காவின் ஆர்தர் வாக்கர் போன்ற மிகச்சிறந்த வீரர்களும் களத்தில் இருந்தனர்.

சோவியத் ஒன்றியம் என அன்று அழைக்கப்பட்ட ரஷியா சார்பில் 3 வீரர்கள் களமிறக்கப் பட்டு இருந்தார்கள். அவர்களில் மிக இளையவர் விக்டர் சனயேவ். விக்டர் சனயேவ் மெக்சிகோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார். ஆகவே ஒலிம்பிக் அரங்கில் அவரை யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.

தகுதிச்சுற்றுப் போட்டியில் அதுவரை யார் என்றே வெளி உலகத்துக்குத் தெரியாத இத்தாலி நாட்டு வீரர் ஜியோசப் ஜென்டைல், திடீரென 17.20 மீ. தாண்டி, ஒலிம்பிக் சாதனை ஒன்றைப் புரிந்து அனைவரையும் மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தார். ஆக, இறுதிப்போட்டியில் தங்கம் யாருக்கு என்ற கேள்வி எல்லோர் நெஞ்சிலும் தகதகத்துக் கொண்டிருந்தது.

இறுதிப்போட்டி! ஜியோசப் ஜென்டைல் 17.22 மீ. தாண்டி அவரது சாதனையை அவரே முறியடிக்க, ரஷிய இளம் வீரர் சனயேவ் ஒரு சென்டிமீட்டர் அதிகம் தாண்டி அதை முறியடித்தார். இப்போது நெல்சன் புருடென்சியோ, அதைவிட 4 சென்டி மீட்டர் அதிகம் தாண்டி அரங்கத்தை அதிரவைத்தார்.

நெல்சன் புருடென்சியோ பில் மே, வாக்கர், துட்கின் உள்பட 6 வீரர்கள் 17 மீட்டர் வரம்பைத்தாண்டி ஒலிம்பிக் அரங்கத்தைத் திகைக்க வைத்தனர். ஆக, ஜோசப் ஸ்மிட்டின் உலக சாதனை 8 முறை முறியடிக்கப்பட்டது. கடல்மட்டத்தை விட உயர்ந்த இடத்தில் இருந்த மலைப்பாங்கான மெக்சிகோ ஒலிம்பிக் அரங்கம், இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இப்போது விக்டர் சனயேவின் கடைசி தாவல். தனது வலு அனைத்தையும் ஒன்று கூட்டிக் கொண்டு சனயேவ் குதித்தார். மின்னணு பலகை 17.39! என காட்டியது. சனயேவ் தனது பயிற்சியாளரின் முகத்தைப் பார்த்தார். பயிற்சியாளர் அகோப் கெர்செல்யானின் முகத்தில் மகிழ்ச்சி பீறிட்டுக் கிளம்பியது.

ஆக, விக்டர் சனயேவுக்கு வெற்றி! ஒலிம்பிக் சாதனையுடன், ஒரு புதிய உலக சாதனையையும் செய்து தங்கம் வென்றிருந்தார் சனயேவ். நாடு திரும்பிய சனயேவுக்கு ஒரு கருப்புநிற சோம்பிரெரோ கார் பரிசாகக் கிடைத்தது. அந்தக் காருக்கான எண் GGA 17-39!

அதன்பிறகு 1972 மியூனிக் ஒலிம்பிக் வந்தது. இந்த இடைப்பட்ட நான்காண்டு காலத்தில் சனயேவ் சில சரிவுகளைச் சந்தித்திருந்தார். அவரது உலக சாதனையை கியூபா நாட்டு வீரர் பெட்ரோ பெரஸ் டுவெனாஸ் முறியடித்திருந்தார். ஐரோப்பிய வாகையர் பட்டத்தை கிழக்கு ஜெர்மன் வீரர் ஜோர்ஜ் டிரமெலிடம், சனயேவ் பறிகொடுத்திருந்தார். அவ்வளவு ஏன்? ரஷிய தேசிய வாகையர் பட்டத்தைக் கூட சனயேவ் இழந்திருந்தார். அத்தனைக்கும் காரணம் காயம். சனயேவால் முழுவீச்சில் மும்முறைத் தாண்ட முடியவில்லை.

இந்தநிலையில் கருங்கடல் பகுதியில் உள்ள சுகுமி சுற்றுலா தலத்துக்குப் போய் ஓய்வெடுத்து, புதிய சனயேவாக திரும்பி வந்திருந்தார் விக்டர் சனயேவ். பயிற்சியின் போது 17 மீட்டர் தொலைவை 5 முறை அவர் கடந்து காட்டினார். அதன்மூலம் 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாரானார் சனயேவ்.

மெக்சிகோ ஒலிம்பிக் போட்டிக்கு வந்திருந்த ஐந்து பழைய வீரர்கள் (மாமது மன்சூர் தியா, பில் மே, ஆர்தர் வாக்கர், ஜியோசப் ஜென்டைல், நெல்சன் புருடென்சியோ) மீண்டும் மியூனிக் ஒலிம்பிக் போட்டிக்கு வந்திருந்தார்கள். கூடவே, உலக சாதனை புரிந்த கியூபா வீரர் பெட்ரோ பெரஸ் டுவெனாஸ், கிழக்கு ஜெர்மன் வீரர் ஜோர்ஜ் டிரமெல், ருமேனியா நாட்டின் காரோல் கோர்பு.

போட்டியில் தகுதி பெறுவதற்கான தொலைவு 16 மீட்டர் 20 சென்டிமீட்டர் என வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம்? ஜியோசப் ஜென்டைல், ஆர்தர் வாக்கர், உலக சாதனை புரிந்த கியூபா நாட்டு வீரர் பெட்ரோ பெரஸ் டுவெனாஸ் போன்றவர்களால் இந்த இலக்கைக்கூட எட்ட முடியவில்லை. சனயேவ், 16.85 தாண்டி தகுதிபெற்றார்.

இப்போது இறுதிப்போட்டி. சனயேவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் கிழக்கு ஜெர்மனியின் ஜோர்ஜ் டிரமெல்தான். சனயேவ் அவரது முதல் முயற்சியிலேயே 17.35 என தாண்டி அதிர வைத்தார். உலக சாதனைக்கு இது வெறும் 5 சென்டிமீட்டர்தான் குறைவு.

மியூனிக் ஒலிம்பிக் அரங்க ஓடுதரை மென்மையானது என்பதால் முதல்முறையே வெற்றிக்கான பாய்ச்சலை பாய்ந்துவிட வேண்டும் என்று சனயேவ் கணித்து வைத்திருந்தார். வலு அனைத்தையும் கூட்டி இறுதிப்பாய்ச்சலில் பாயலாம் என்பது அந்த மாதிரியான மென்மையான தரையில் எடுபடாது.

கிழக்கு ஜெர்மன் வீரர் ஜோர்ஜ் டிரமெல்லால் அவரது 5ஆவது குதிப்பில் 17.31ஐயே தொட முடிந்தது. முடிவில் இரண்டாவது முறையும் ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் தங்கம் சனயேவின் வசமாகியது.

நாடு திரும்பிய சனயேவுக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் லெனின் உள்பட பல பரிசுகள், பெருமைகள் காத்திருந்தன.

இப்போது 1976 மாண்ட்ரியால் ஒலிம்பிக் போட்டி. இந்தபோட்டிக்கு முன் வழக்கம்போல தனது உலக சாதனையை பறிகொடுத்திருந்தார் சனயேவ். பிரேசில் நாட்டின் ஜோவோ கார்லோஸ் டி ஒலிவெய்ரா, டிரிபிள் ஜம்ப்பில் 17.89 தாண்டி உலக சாதனை புரிந்திருந்தார். அதுவும் சனயேவின் உலக சாதனையை விட 50 சென்டி மீட்டர் அதிகம் தாண்டி ஒலிவெய்ரா முறியடித்திருந்தார். அதை, ‘21ஆம் நூற்றாண்டுக்குள் பாய்ந்த பாய்ச்சல்’ என பலர் வர்ணித்திருந்தார்கள்.

டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டும் போட்டியில், ஒரே வீரர் அடுத்தடுத்து 2 ஒலிம்பிக்குகளில் தங்கம் வெல்வதுதான் வழக்கம். அந்தநிலையில், மாண்ட்ரியால் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாம் முறையும் சனயேவ் தங்கம் வெல்வரா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

இப்போது மாண்ட்ரியால் ஒலிம்பிக் இறுதிப்போட்டி. இந்தப் போட்டியில் சனயேவுடன் மியூனிச் ஒலிம்பிக்கில் போட்டியிட்ட வீரர்களில் ஒரேயொருவர்தான் வந்திருந்தார். அவர் ருமேனியா வீரர் கோர்பு.

மாண்ட்ரியால் ஒலிம்பிக் அரங்கம் கிட்டத்தட்ட மூடப்பட்ட அரங்கம் என்பதால் டிரிபிள் ஜம்ப் வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை. முதல் இரு முயற்சிகளில் யாராலும் 17 மீட்டருக்கு அப்பால் தாண்ட முடியவில்லை.

இந்தநிலையில் சனயேவ் 3ஆவது முயற்சியில் 17.06 என தாண்டி முன்னிலை பெற்றார். அமெரிக்காவின் ஜேம்ஸ் பட், 17.18ஐத் தொட போட்டி சூடுபிடித்தது. இப்போது சனயேவின் முறை. ஐந்தாவது முயற்சியில் சனயேவ், ஜேம்ஸ் பட்டை விட 11 சென்டி மீட்டர் அதிகம் தாண்டி, 17.29ஐ தொட்டபோது அரங்கம் அதிர்ந்தது. கறுப்பின வீரரான ஜேம்ஸ் பட் அதன்பிறகு மிகமிக முயன்றும் சனயேவின் தொலைவைத் தாண்ட முடியவில்லை. ஆக, 3ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் சனயேவ்! ஜேம்ஸ் பட் வெள்ளிப் பதக்கமும், பிரேசில் வீரர் ஒலிவெய்ரா வெண்கலமும் வென்றனர்.

ஒலிம்பிக் என்பது நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடியது. அதில் போட்டியிடும் வீரருக்கு ஒவ்வொரு ஒலிம்பிக்குக்கு இடையிலும் 4 வயது கூடிவிடும். மெக்சிகோ, மியூனிச், மாண்ட்ரியால் என்று ‘எம்’ வரிசை ஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை வெற்றி வாகை சூடிய சனயேவ், இறுதியாக எதிர்கொண்டது இன்னொரு எம் எழுத்தில் தொடங்கும் இன்னொரு ஒலிம்பிக்கை. அது 1980 மாஸ்கோ ஒலிம்பிக்.

சனயேவ் அவரது தாய்நாட்டில் நடந்த மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றார். 4ஆவது முறையாக அவர் தங்கம் வெல்வரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.

மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளவராகக் கருதப்பட்ட வீரர் பிரேசில் நாட்டின் ஒலிவெய்ரா. அவரைத்தவிர ஆஸ்திரேலியாவின் இயான் காம்பெல், பிரிட்டனின் கெய்த் கார்னர், சனயேவின் சக (ரஷிய) வீரரான ஜேக் உடுமாய் என போட்டி பலமாகவே இருந்தது.

ஒலிவெய்ரோ 16.96 தொலைவைத் தாண்ட, சனயேவ், 16.83 தாண்ட போட்டி அமர்க்களப் பட்டது. ஆஸ்திரேலிய வீரர் இயான் காம்பெல் 17.50 தாண்டியபோது அதை யாராலும் நம்ப முடியவில்லை. அது தவறான தாண்டல் என அறிவிக்கப்பட்டது.

ரஷிய வீரர் ஜேக் உடுமாய் 17.35 என தனது பாய்ச்சலைப் பதிவு செய்தார். இது சனயேவ் ஏற்படுத்தியிருந்த உலக சாதனையை விட 5 சென்டி மீட்டர் மட்டும்தான் குறைவு. ஒலிவெய்ரா 17.22! சனயேவ் 17.02.

இறுதி முயற்சியாக சனயேவ் 17.24 என தாண்ட, பிரேசில் வீரர் ஒலிவெய்ரா 17.80 என தாண்டி அதிர வைத்தார். ஆனால், அது தவறான பாய்ச்சல் என்பது தெரிந்து சிவப்புக் கொடி உயர்த்தப்பட்டது.

முடிவில் ரஷிய வீரர் ஜேக் உடுமாய் தங்கம் வெல்ல, சனயேவ் வெள்ளி வென்றார். ஒலிவெய்ராவுக்கு வெண்கலம். வெற்றி மேடையில் ஜேக் உடுமாயை விட சனயேவுக்கே அதிக கைதட்டல் ஆரவாரம் இருந்தது. அவர் வென்றது வெள்ளிப் பதக்கம்தான். ஆனால் 3 தங்கப் பதக்கங்களுக்குப் பிறகு அவர் பெற்ற வெள்ளிப் பதக்கமல்லவா அது?!

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து சனயேவ் அதன்பின் ஓய்வு பெற்றாலும், விளையாட்டு ஆர்வலர்களின் மனங்களில் இருந்து இன்றும்கூட அவர் விடைபெறவே இல்லை.

மோகன ரூபன்

…………….

You may also like

© RajTamil Network – 2024