Saturday, September 21, 2024

முறைகேடு புகார்: 9 லட்சம் பேர் எழுதிய ‘நெட்’ தேர்வு ரத்து

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த தேர்வை எழுத 6 லட்சத்து 35 ஆயிரத்து 587 பெண்களும், 4 லட்சத்து 85 ஆயிரத்து 579 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 59 பேர் என மொத்தம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் தேர்வை எழுதினார்கள்.

தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில், நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட இருப்பதாகவும்' சொல்லப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணைக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024