Wednesday, October 2, 2024

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கேரள அரசு முடிவு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கேரள அரசு முடிவுபுதிய அணை கட்டுவது தொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அணை கட்டுவது தொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணையின் ஸ்திரத்தன்மை குறித்து அச்சம் தெரிவித்து வரும் கேரள அரசு, இந்த அணைக்கு மாற்றாக வேறு இடத்தில் புதிய அணை கட்ட தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநிலங்களும் தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நிலச்சரிவு காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு பகுதி மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து அணையைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மீண்டும் அச்சம் எழுந்திருப்பதாக புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, அணைப் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டம் தொடா்பாக மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின் திங்கள்கிழமை கூறியதாவது:

அணைப் பாதுகாப்பு தொடா்பாக கிராம மக்களிடையே மீண்டும் அச்சம் எழுந்துள்ள நிலையில், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் வழக்கமாக 90 முதல் 100 மி.மீ. மழை பதிவாகும். ஆனால், தற்போது 200 முதல் 300 மி.மீ. வரை மழை பதிவாகிறது. கடந்த 2018-இல் மிகப் பெரிய வெள்ள பாதிப்பை கேரளம் சந்தித்தது. தற்போது, நிச்சயமற்ற தட்பவெப்ப நிலை காரணமாக, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானதாக உள்ளது.

அந்த வகையில் பழைமையான முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக வேறு இடத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இது கேரள எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கேரளத்துக்கு சாதமான தீா்ப்பு விரைவில் வரும் என நம்புகிறோம்.

அதே நேரம், அண்டை மாநிலமான தமிழகத்துடன் பகைமை நிலையை கேரளம் உருவாக்காது. கேரள மக்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, தமிழகத்துக்கு போதிய தண்ணீா் கிடைப்பதை உறுதிப்படுத்துவம் கேரள அரசின் நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை அடைய, துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘அணையின் ஸ்தரத்தன்மை குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அணை பலமாக உள்ளது. எனினும், புதிய அணையின் கோரிக்கையில் கேரளம் உறுதியாக உள்ளது’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024