Friday, September 20, 2024

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

அணை முழு கொள்ளளவை எட்டியதால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரபடி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவிகளில் பாறைகள் தெரிகிறது. வெள்ளப்பெருக்கின் போது அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் நடைபாதைக்கு செல்லும் வழியில் சிக்கி உள்ளன.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் தண்ணீரை திறந்து வைத்தார். அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 91 கனஅடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 116.36 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 10 மணி அளவில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவும், மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 524 கனஅடி நீர் அணைக்கு வந்தது. இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 91 ஆயிரத்து 368 கனஅடியாக குறைந்தது. அதேநேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டமானது 118.41 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து காலையை விட இரவு குறைந்தாலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

இந்நிலையில் 43வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் திறப்பு 46,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு வரலாற்றில் மேட்டூர் அணை இதுவரை 71 முறை 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளநிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, நீர்வளத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், நீர்நிலைகள் அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024