‘‘மு.க. ஸ்டாலினின் பி-டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்’’ – டி.டி.வி. தினகரன் விமர்சனம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

‘‘மு.க. ஸ்டாலினின் பி-டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்’’ – டி.டி.வி. தினகரன் விமர்சனம்

சாத்தூர்: “தமிழக முதல்வர் ஸ்டாலினின் பி-டீமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார், மேலும், இந்த ஆட்சி முடியும் வரை எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய மாட்டோம் என ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது” என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை (செப்.16) அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி. தினகரனுக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: “அண்ணாவின் கருத்துக்கள் இன்று வரை புத்தகங்களில் படிக்கப்படுகிறது. கழகமே குடும்பம் என அண்ணா இருந்தார். அவர் தொடங்கிய திமுக தற்போது குடும்ப கட்சியாகிவிட்டது. கோடநாடு கொலை வழக்கில் கொளையாளிகளை நெருங்கிவிட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஏன் இதுவரை பழனிசாமியை கைதுசெய்யவில்லை?. பழனிசாமியால் இரட்டை இலை பலவீனப்பட்டுள்ளது. கொள்கைக்காக நிற்பவர்கள் நம் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள். நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் உறுதியாக ஆட்சியமைப்போம். மத்தியில் இருப்பது நமது ஆட்சி. மாநிலத்திலும் நமது ஆட்சி வரும். தேவையான திட்டங்களை எளிதாக பெற்றுத்தருவோம். இப்பகுதியில் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. பட்டாசுத் தொழில் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும், நமது ஆட்சி வந்தவுடன் விபத்து இல்லாமல் பட்டாசுத் தொழில் நடத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள். வெடி விபத்தில் இறப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் திமுகவின் மனநிலை. அண்ணா இன்று இருந்தால் திமுகவை கலைத்துவிட்டுச் சென்றிருப்பார். ஸ்டாலினின் பி-டீமாக பழனிசாமி செயல்படுகிறார். அதனால்தான் நான் பாஜக கூட்டணியில் இணைந்தேன்,” என்று அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வந்த கோபத்தால் திமுக திருந்தி இருப்பார்கள் என்று நம்பி ஆட்சி பொறுப்பை கொடுத்தார்கள். ஆனால், காய்ந்த மாடு கரும்பு தோட்டத்துக்கு புகுந்தது போல் திமுகவின் செயல்பாடு இருக்கிறது. வருங்கால சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகி உள்ள ஒரு அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

வரும் சட்டமன்ற தேர்தலில் உறுதியான முறையில் மாற்றம் வரும். மோடி வெற்றிபெறாவிட்டால் திமுகவுக்குத்தான் லாபம். இரட்டை இலை சின்னம் திமுக வெற்றி பெறுவதற்குத் தான் பயன்படுகிறது. பழனிசாமி, ஸ்டாலின் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசுவது நாடகம். இதுவரை திமுக அரசால் பழனிசாமி மீது ஒரு வழக்குக்கூட ஏன் பதியப்படவில்லை? இந்த ஆட்சி முடியும் வரை எடப்பாடி பழனிசாமியை கைது செய்யமாட்டோம் என ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது,” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024