மேட்டூர் அணைக்கு 16,500 கனஅடி நீர்வரத்து: நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

மேட்டூர் அணைக்கு 16,500 கனஅடி நீர்வரத்து: நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர்/தருமபுரி: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு16,500 கனஅடியாக நீடிக்கிறது. அதேபோல, அணையின் நீர்மட்டம்முழு கொள்ளளவான 120 அடியாக தொடர்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரிநீர்திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது. இதனால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து, உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. எனினும், மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை இரண்டாவது முறையாக கடந்த 12-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 16,500 கனஅடியாக நீடிக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.

ஒகேனக்கல்லில் மாற்றமில்லை… தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாகவும், அன்று மாலை 16 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. கடந்த 15-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தநீர்வரத்து நேற்று காலை அளவீட்டின்போதும் அதே அளவுடன் தொடர்கிறது.

You may also like

© RajTamil Network – 2024