மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் 1.25 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று மேட்டூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி விட்டதால், அவற்றின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று (ஜூலை 30) காலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு நீர்வரத்து 70,257 கன அடியாக இருந்தது. அதுவே இன்று காலை 8 மணிக்கு 62,870 கன அடியாக குறைந்தது.

அணையின் நீர்மட்டம் இன்று காலை 4 மணிக்கு 118.77 அடியாக இருந்த நிலையில் 8 மணிக்கு 118.84 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 91.52 டிஎம்சியாக இருந்த நிலையில், 91.63 டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 23,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்னும் 1.50 டிஎம்சி தண்ணீர் வந்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. எனவே, அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 75,000 கன அடி முதல் 1,25,000 கன அடி வரை திறந்துவிடப்படலாம். எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!

சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே… சிவாங்கி வர்மா!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்