யானை முகத்னோனுக்கு யானைகள் பூஜை: முதுமலையில் சதுர்த்தி விழாவை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

யானை முகத்னோனுக்கு யானைகள் பூஜை: முதுமலையில் சதுர்த்தி விழாவை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

முதுமலை: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பூஜையிட விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்காக கொழுக்கட்டை, சுண்டல் செய்து சிறப்பு பூஜைகளை மக்கள் செய்வர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை முகனோனுக்கு யானைகளே பூஜை செய்வது சிறப்பு.

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படும். இதில் சிறப்பம்சம் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மணி அடித்து, மண்டியிட்டு, தோப்புகரணமிட்டு விநாயகரை வழிப்படுவது தான்.

யானைகளின் சிறப்பு பூஜை: தெப்பக்காட்டில் இன்று மாலை நடந்த சிறப்பு பூஜையில் முகாமில் உள்ள யானைகள் பங்கேற்றன. முன்னதாக மாயாற்றில் யானைகளை குளிப்பாட்டிய பாகன்கள், குங்குமம் மற்றும் சந்தனமிட்டு அலங்கரித்த பின்னர் பூஜைக்கு அணிவகுத்து அழைத்து வந்தனர்.

யானைகள் கோயில் முன்பு அணிவகுத்து நின்றன. கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனையை ஏந்தி குருக்கள் முன்னே செல்ல மசினி அவருக்கு பின்னால் மணியடித்தவாறே சென்று கோயிலை மூன்று முறை சுற்றி வந்தது. விநாயகருக்கு தீபாரதனை காட்டிய போது பூஜையில் பங்கேற்ற யானைகள் பிளற தெப்பாடு பகுதியே அதிர்ந்தது.

பின்னர் பிள்ளையார் முன்பு துதிக்ககைளை வளைத்து, உயர்த்தி விநாயக பெருமானை வழிப்பட்டது. யானை குட்டியின் பிள்ளையார் வழிப்பாடு அங்கு யானைகள் நடத்திய பூஜை காண வந்திருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.

பூஜை முன்னிட்டு யானைகளுக்கு பொங்கல், கரும்பு, தேங்காய், பழம் மற்றும் வெல்லம் என சிறப்பு பதார்த்தங்கள் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா வழங்கினார். பின்னர் விழாவை கண்டுகளித்த அனைத்து சுற்றுலாப்பயணிகளுக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.

விழாவில், உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கண்டுகளித்தனர். யானைகள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியது பார்த்து. அவற்றின் வளர்ப்பு குறித்து பிரமித்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024