யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை; டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிக்க: 12 ஆண்டுகள் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி; டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த நியூசிலாந்து!

யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யாருடைய திறமை மீதும் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனவும், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் யாருடைய திறனையும் சந்தேகப் படவில்லை. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது கண்டிப்பாக நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்களில் நம்பிக்கை வைத்து விளையாடியது போல இந்திய அணியும் விளையாட வேண்டும்.

இதையும் படிக்க: சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

இந்த டெஸ்ட் தொடர் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல. நியூசிலாந்து அணி வீரர்களை பாராட்டியாக வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டிலும் சிறப்பாக விளையாடினர். நியூசிலாந்து அணியின் சவால்களுக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இந்திய அணி பேட்டிங்கில் சரியாக விளையாடி ரன்கள் சேர்க்கவில்லை. போட்டியில் வெற்றி பெற 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். ஆனால், பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்றவாறு ரன்கள் குவிக்க வேண்டும்.

டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களையோ அல்லது பேட்ஸ்மேன்களையோ குறைகூற விரும்பவில்லை. இது அணிக்கு ஏற்பட்ட தோல்வி. இந்திய அணி வான்கடே டெஸ்ட் போட்டியில் தங்களை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

இதையும் படிக்க:2 போட்டிகளில் 39 விக்கெட்டுகள்..! யார் இந்த சுழல் பந்துவீச்சாளர்கள்?

சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012-13 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024