Wednesday, October 30, 2024

யார் யாருக்கு எந்தெந்த வகையில் பணம் வரும்..? ஜாதக கணிப்புகள்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தன ஸ்தானத்துடன் சகோதர ஸ்தானம் தொடர்பு பெற்றால் இளைய சகோதரர் வழி பணம் வந்து சேரும்.

அஷ்ட லஷ்மி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், ஸ்ரீ நாத யோகம், லக்ன அதி யோகம், கஜ கேசரி யோகம், புதாத்ய யோகம், அம்ச யோகம் போன்றவை செல்வ யோகங்கள் ஆகும். ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதை காண முடியும்.

அதே போன்று சிலருக்கு எவ்வளவுதான் பணம் பெற்றும் அல்லது செல்வ யோகங்கள் இருந்தாலும், தேவைப்படும் சமயத்தில் கைகொடுப்பதில்லை. அதாவது ஒருவருக்கு பல இடங்களில் நிலம், வீடு போன்றவை இருந்தாலும், தேவைப்படும் சமயத்தில் அவற்றை விற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய் விடுகிறது. சிலருக்கு வரவேண்டிய பணம் சரியான நேரத்திற்கு வந்து சேராது. இதற்கு ஜாதகத்தில் உள்ள சில பாதகமான அம்சங்கள்தான் காரணம்.

ஆம், பண வரவுக்கும் ஜாதகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பொதுவாக தனகாரகன் என்று சொல்லப்படும் குருவின் நிலை மற்றும் சுக போகங்களைத் தரும் சுக்கிரனின் நிலை ஜாதகத்தில் தனஸ்தானம், லாபஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், முக்கிய இடம் பெறுகிறது. இந்த ஸ்தானங்கள் மட்டுமே பண வரவை தீர்மானிப்பதில்லை. இந்த இடத்துடன் யார் யார் எல்லாம் சம்பந்தம் பெற்றிருக்கின்றார்களோ அவர்களை வைத்தே பண வரவு யோகம் இருக்கும்.

எந்தெந்த வகையில் பணம் வரும்?

* தன ஸ்தானத்துடன் சகோதர ஸ்தானம் தொடர்பு பெற்றால் இளைய சகோதரர் வழி பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் மாதுர் ஸ்தானம் தொடர்பு பெற்றால் தாய் வழி அதாவது தாயின் சொத்து அல்லது அவரின் வருவாய் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானம் தொடர்பு பெற்றால் தங்கள் பிள்ளைகளால் அல்லது தாத்தா பாட்டியின் வழி பணம் வரும்.

* உதாரணமாக தன ஸ்தானத்துடன் ருண ரோக சத்துரு ஸ்தானம் தொடர்பு பெற்றால் வழக்குகளின் மூலம் அல்லது தன் எதிரியின் மூலம் தனம் வரும்.

* தன ஸ்தானத்துடன் களத்திர ஸ்தானம் தொடர்பு பெற்றால் மனைவி அல்லது கணவன் வழி பணம் வரும். அதாவது திருமணம் மூலம் பண வரவு இருக்கும்.

* தன ஸ்தானத்துடன் மாங்கல்ய ஸ்தானம் தொடர்பு பெற்றால் இன்சூரன்ஸ் வழி பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் பிதுர் ஸ்தானம் தொடர்பு பெற்றால் தந்தை வழி அதாவது தந்தையின் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.

* தன ஸ்தானத்துடன் கர்ம ஸ்தானம் தொடர்பு பெற்றால் தானே சம்பாதித்தல் அதாவது சுய தொழில் அல்லது வேலை பார்ப்பதன் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் லாப ஸ்தானம் தொடர்பு பெற்றால் மூத்த சகோதர சகோதரியின் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் அயன சயன போக ஸ்தானம் தொடர்பு பெற்றால் வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும். அதாவது இங்கிருந்தே பணத்தை பெற இயலும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்செய்பவர்கள், வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்தும் பணம் பெற இயலும்.

அவரவர் ஜாதகப்படி யார் யார் மூலம் பண வரவு இருக்கும் என்பது மாறுபடலாம். அதாவது ஒருவர் ஜாதகத்தில் 2,5,9,11 ஆகிய ஸ்தானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

பண வரவுக்கான கிரக நிலைகள்

* ஒவ்வொரு ஜாதகத்திலும் தனஸ்தானாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி, லாபாதிபதி மாறும். அவர்கள் யார் என்று முதலில் கண்டுபிடித்து அந்தந்த கிரகங்களுக்கேற்ப தகுந்த ஓரை மற்றும் நாட்களில் நாம் பணம் பெற முயற்சித்தால் பணத்தை ஈட்டலாம். கோட்சாரப் படி குரு பகவான் 2,5,7,9,11 ஆகிய ஸ்தானங்களின் வரும்போது பணம் வரும்.

* தனஸ்தானாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி, லாபாதிபதிகளின் திசை, புத்தி, அந்தரம் மற்றும் அந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் கிரகங்களின் திசை, புத்தி, அந்தரத்தில் பணம் வரும்.

* தன காரகன் என்று சொல்லப்படும் குரு மற்றும் சுகங்களை அனுபவிக்க கூடிய சுக்கிரனின் திசை புத்தி அந்தரத்திலும் பணம் வரும்.

* கோச்சாரப்படியும், ஜென்ம ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கோட்சாரத்தில் குரு மற்றும் சுக்கிரன் தொடும் கிரகங்களின் நிலையைப் பொறுத்தும் பண வரவு அமையும்.

கட்டுரையாளர்: திருமதி ந.ஞானரதம்

செல்: 9381090389

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024