ஜெய்ப்பூர்: ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போனதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
அதிக அளவிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டில், ரந்தம்பூர் பூங்காவில் இருந்த 13 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை மூன்று ஆண்டுகளில் நடந்ததாகும்.
இதையும் படிக்க : அமெரிக்க தேர்தல்: 17 மாகாணங்களில் டிரம்ப், 9-ல் கமலா வெற்றி!
பூங்காவில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கான 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ராஜஸ்தான் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. காணாமல் போன புலிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் திங்கள்கிழமை நியமித்துள்ளார்.
விசாரணையில் புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா நிர்வாகத்தின் அலட்சியம் கண்டறியப்பட்டால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மே 17 முதல் செப். 30 வரை நான்கு மாத கால இடைவெளியில் காணாமல் போன 14 புலிகளை கண்டறிவதே பூங்கா நிர்வாகத்தின் முதன்மைப் பணியாக உள்ளன.
ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் கண்காணிப்பில் இருந்து புலிகள் காணாமல் போன விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த அக். 14ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, ஒராண்டுக்கு மேலாக 11 புலிகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும், 11 புலிகள் பற்றிய உறுதியான தகவல்கள் ஓராண்டாக இல்லை. இதனால், புலிகள் காணாமல் போன விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் கூறுகையில்,
“விசாரணைக் குழு இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்பிக்கும். சில கண்காணிப்பு குளறுபடிகள் உள்ளன, அதனை சரிசெய்ய வேண்டும். சமீபத்தில், வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகள் சேகரித்த போது, இந்த புலிகள் கண்காணிப்பு கேமிராக்களின் சிக்காதது தெரியவந்தது” எனக் கூறினார்.
மேலும், மாநில வனத்துறை 24 கிராமங்களை கண்டறிந்து, அவர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 2016ஆம் ஆண்டும் இதுபோன்ற இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ரந்தம்பூர் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவற்றை கண்காணிப்பதில் சிரமத்தை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.