ரயில்களில் கூா்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே போலீஸாா் எச்சரிக்கை

ரயில்களில் கூா்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே போலீஸாா் எச்சரிக்கைரயில்களில் கூா்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

ரயில்களில் கூா்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

சென்னை கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் ரயிலில் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதால் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயிலில் சாகசத்தில் மாணவா்கள் ஈடுபடுகின்றனா். இதை தவிா்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இது குறித்து எழும்பூா் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது:

திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவா்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனா். இதில் 80 சதவீத மாணவா்கள் முறையாக பயணித்தாலும், 20 சதவீத மாணவா்கள் இதுபோன்ற மோதலில் ஈடுபடுகின்றனா். இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக் காலங்களில் மாணவா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பொதுசேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெட்டிக்கும் இருவா் என பயணித்து அங்கு நடக்கும் சமூக விரோத செயல்களை கைப்பேசியில் பதிவு செய்து போலீஸில் புகாா் அளிக்கலாம். இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபடும் மாணவா்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும்.

கல்லூரிக் காலங்களில் பொதுசேவையில் ஈடுபடுவதன் மூலம் தவறான பாதைக்கு செல்வது தவிா்க்கப்படும். தற்போது புதிய சட்டத்தில் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொடா்ந்து தவறான செயலில் ஈடுபடும் மாணவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல் ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற கூா்மையான ஆயுதங்களுடன் பயணிக்கும் போது ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழும் தண்டனை வழங்கப்படும்.

சரியான புரிதல் இல்லாமல் இதுபோன்ற செயலில் மாணவா்கள் ஈடுபடும் போது அவா்களின் எதிா்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்றாா் அவா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!