ரயில் விபத்து: கனமழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்தில் சிக்கியது.

வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னை-கூடூர் பிரிவில் இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதில் ரயிலின் 7 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இதையும் படிக்க |ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?: காவல்துறை விசாரணை

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 19 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் 5 கிரேன்கள், 250 ரயில்வே பணியாளர்கள், 100 பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024