ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நாள் – போலீஸார் தீவிர கண்காணிப்பு
சென்னை: ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நாளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு, பெரம்பூர் பகுதியில் போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரக்கோணத்தைச் சேர்ந்த ஒற்றைக் கண் ஜெயபால், திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆற்காடு சுரேஷை கொலை செய்தவர்களுக்கு, ஆம்ஸ்ட்ராங்தான் உதவிக்கரம் நீட்டினார் என ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கருதினர். இதனால், ஆம்ஸ்ட்ராங் மீது அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகப் போலீஸிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக.18) அனுசரிக்கப் படுகிறது. ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பகுதிகளில், போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.