Saturday, September 21, 2024

ராணுவம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் – ராஜ்நாத் சிங் பேச்சு

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில், ராஜ்நாத் சிங்குக்கு மீண்டும் ராணுவத்துறை ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் ராணுவ அமைச்சகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்.

முன்னதாக தனது அலுவலகம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு, ராணுவ இணை மந்திரி சஞ்சய் சேத், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

ராணுவ மந்திரியாக 2-வது முறையாக பதவியேற்ற ராஜ்நாத் சிங், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும், ராணுவ உற்பத்தியில் தற்சார்பை எட்டுவதும் எங்கள் நோக்கம் ஆகும்.

பாதுகாப்பு படைகள் நவீனமயமாக்கல், பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களின் நலனில் கவனம் செலுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு தொடர்வோம்.

பாதுகாப்பு ஏற்றுமதியை வரும் காலங்களில் அதிகரிப்பதே நோக்கமாக இருக்கும். கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.21,083 கோடியாக இருந்தது. இதை 2028-29-ம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதே இலக்காகும்.

ஆயுதப் படைகள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. அவை ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளன.

நமது வீரர்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் வீரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக ராணுவ அமைச்சகத்தின் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டங்களை வகுப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை ராஜ்நாத் சிங் நடத்தினார். இதில் வீரர்களின் நலன் குறிப்பாக ஓய்வு பெற்ற வீரர்களின் குறை தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு தயார் நிலை, தற்சார்பு திட்டங்களின் செயல்பாட்டை முடுக்கி விடுதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தில் வகுத்துள்ள நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் முப்படை தளபதிகள், ராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

© RajTamil Network – 2024