ரிஷப் பண்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் – பாக்.முன்னாள் வீரர் புகழாரம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இந்தியாவிலேயே 2 வீரர்களின் தடுப்பாட்டம் மட்டுமே அட்டாக் செய்வதுபோல் இருக்கும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.

லாகூர்,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் வங்காளதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 109 ரன் (13 போர், 4 சிக்ஸ்) அடித்து அவுட் ஆனார். இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலேயே 2 வீரர்களின் தடுப்பாட்டம் மட்டுமே அட்டாக் செய்வது போல் இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் வீரேந்திர சேவாக் மற்றொருவர் ரிஷப் பண்ட் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்து அதிரடியாக விளையாடி கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளதாகவும் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவில் 2 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். முதல் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். அவர்களின் தடுப்பாட்டம் கூட எதிரணியை அட்டாக் செய்வதாக இருக்கும். சேவாக் பெரும்பாலும் முதல் பந்தில் பவுண்டரிகளை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவரைப் போலவே ரிஷப் பண்ட் தடுப்பாட்டமும் அட்டாக் செய்வதாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி வங்காளதேசத்துக்கு எதிராக அவர் நன்றாக விளையாடினார். அதனால் நமது இதயங்களையும் அவர் வென்றுள்ளார்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024