லட்சக்கணக்கில் விலை போகும் ராகுல் காந்தி தைத்த செருப்பு: யாருக்கும் தர மாட்டேன் என கூறும் தொழிலாளி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

லக்னோ,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. இவர் கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ராம்சேட் என்ற ஒரு தொழிலாளி செருப்பு தைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஏழ்மை நிலையை பார்த்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேசினார்.

அப்போது அந்த தொழிலாளி தான் 40 ஆண்டுகளாக செருப்பு தைத்து வருவதாக கூறினார். மேலும் அவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் ராகுல் காந்தியிடம் கூறினார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார். அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக மறுநாள் வழங்கி உள்ளார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் இனி கைகளில் செருப்புகளை தைக்க தேவை இல்லை என்று கூறினார். மேலும் அவரிடம் உரையாடிய ராகுல் காந்தி, செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தைத்த காலணியை வாங்குவதற்கு பலரும் ராம் சேட்டை அழைத்து வருகின்றனராம். அந்த செருப்புகளை பலர் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். ஆனால் அதை விற்க ராம் சேட் மறுத்துவிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்சேட்,

ராகுல்காந்தி வருவதற்கு முன்பு நான் யார் என்று இந்த உலகத்திற்கு தெரியாது. இப்போது பலர் வந்து என்னுடன் செல்போனில் செல்பி எடுத்து செல்கின்றனர். என்னுடைய உலகம் முற்றிலும் மாறிவிட்டது. எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. பிரபல நபர் ஒருவர் எனக்கு போன் செய்து ராகுல்காந்தி தைத்து கொடுத்த செருப்பை ரூ.5 லட்சத்திற்கு தருமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மேலும் ஒரு 5 லட்சம் தருவதாக கூறினார். அந்த செருப்பு எனக்கு கிடைத்த அதிர்ஷடம் நான் யாருக்கும் விற்கவோ, தரவோ மாட்டேன் என அவரிடம் தெரிவித்துவிட்டேன்.

நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த செருப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். ராகுல் காந்தி தைத்த செருப்புகள் எனக்கு விலைமதிப்பற்றவை. ராகுல் காந்தியால் தைக்கப்பட்ட செருப்புகளை நாங்கள் பிரேம் செய்து கடையில் வைப்போம் என அவர் தெரிவித்தார். மேலும் ராகுல்காந்தி வந்து சென்ற பிறகு பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனது பிரச்சினைகள் குறித்து விசாரிக்க வரத் தொடங்கியுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024