Wednesday, September 25, 2024

லட்சாதிபதி சகோதரி திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியுள்ளது: பிரதமர் பெருமிதம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

‘லட்சாதிபதி சகோதரி’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த வகையில், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்கள் இன்று(ஆக. 25) கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ஜல்காவ்ன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘லட்சாதிபதிகளாக பெண்களை மாற்றும் முன்னெடுப்பின்கீழ்’, 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவித்தார். மேலும், 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடனுதவியை அவா் வழங்கினார். 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 48 லட்சம் உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,500 கோடி நிதியை அவா் விடுவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அதன்பின் அவர் பேசியதாவது, “லட்சாதிபதி சகோதரி திட்டம், மகள்கள், சகோதரிகள் வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டம் மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றும் ஒரு திட்டம். இத்திட்டத்தால் வருங்கால தலைமுறை வலுப்பெறும்.”

”இந்தியாவின் பெண்கள் சக்தி, நம் சமூகத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து பெரும்பங்காற்றி வருவதுடன், நம் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இன்று, நம் நாடு, ‘வளர்ச்சியடைந்த நாடாக’ மாற முயற்சிக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் பெண்களின் சக்தியும் முன்னேற்றாப் பாதையில் நடைபோடுகிறது.

ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த தலைவிதியும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி லட்சாதிபதியாக மாறுவதால் மாற்றம் அடைகிறது.

”தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை எளிமையாக்குவதில் நம் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நாடெங்கிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுக்கு தலை வணங்குகிறேன்.”

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், “பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்பதை மாநில அரசுகளுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளி யாராக இருப்பினும், தப்பித்துவிடக் கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுந்தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் சட்டங்களை வலிமையாக்கி வருகிறோம்.”

இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகளைவிட, மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். “2014-ஆம் ஆண்டு வரை, ரூ. 25,000 கோடிக்கும் குறைவான கடன் தொகை மட்டுமே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 9,00,000 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

You may also like

© RajTamil Network – 2024