Saturday, September 21, 2024

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருமலை,

திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில், "லட்டு மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்தது. கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்கும் பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நெய்யில் காய்கறி கொழுப்பும், விலங்கு கொழுப்பும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. விலங்கு கொழுப்பு (பன்றி கொழுப்பு), பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் திராட்சை விதை, ஆளிவிதை உட்பட மீன் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. சோதனைக்கு உட்பட்ட நெய் மாதிரியில் இதெல்லாம் ஒரு கலவையாக இருந்ததிருக்கிறது. தூய பால் கொழுப்பின் அளவு 95.68 முதல் 104.32 வரை இருக்க வேண்டும். ஆனால், எங்களின் அனைத்து நெய் மாதிரிகளிலும் சுமார் 20 அளவே இருக்கின்றன.

அதாவது வழங்கப்படும் நெய்யில் அதிக கலப்படம் உள்ளது. கலப்படம் செய்தவர்களை தடைப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை நாங்கள் தொடங்கி உள்ளோம். சப்ளையர் மீது அபராதம் விதித்துள்ளோம். நெய் சப்ளைகளை மேம்படுத்தவும், எங்கள் உள் அமைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். எங்கள் சொந்த ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் தீர்க்கப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக நான் பொறுப்பேற்றதும், வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பிரசாதமாக வழங்கப்படும் நெய் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படும் லட்டுவின் தரம் குறித்து முதல்-மந்திரி கவலை தெரிவித்தார். தரத்தில் பாதிப்பு உண்டாக்குவது புனிதமற்ற தன்மையை செய்வது போன்று. தூய்மையான பசும்பால் நெய் கிடைப்பது உள்ளிட்ட இந்த கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான வேலைகளை ஆரம்பித்தோம். நெய்யில் கலப்படத்தை சோதிக்க எங்களிடம் ஆய்வுக்கூடம் இல்லை என்பது தெரிய வந்தது. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த சிஸ்டமும் இல்லை. நெய் செய்ய டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிடும் விலை சாத்தியமற்றதாக உள்ளது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு குறைவாக இருந்தது. அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம்.

சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாதிரிகளையும் சேகரித்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அவை அளித்த அறிக்கைகள் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தன" என்று நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறினார்.

The Sanctity of Srivari Laddu Prasadam is Restored Again#SrivariLaddu#TirumalaLaddu#LadduPrasadam#TTD#TTDAdministration#TTDevasthanamspic.twitter.com/ytHdrpyDGh

— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) September 20, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024