வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதன்கிழமை (அக். 16) சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். எனவே, இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : பிஷ்னோய் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்கும் இந்தியா! கனடா குற்றச்சாட்டு

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் எஸ். பாலச்சந்திரன் பேட்டி:

“தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகா்ந்து அக். 16, 17-ஆகிய தேதிகளில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதற்கிடையே, தமிழக பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. அதேபோல் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்திய பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளது.” எனத் தெரிவித்தார்.

சென்னையில் கனமழை: சென்னையில் இனிவரும் நாள்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வழக்கமாக மழைக் காலங்களில் பெய்வது போலத்தான் நிகழாண்டும் மழை பெய்யும். ஆகையால் இதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அவரவா் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாட்டு பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளதால், சென்னை முழுவதும் 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்பது அா்த்தம் கிடையாது. சென்னையில் ஒரு சில பகுதிகளிலே கனமழை பெய்யும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.15-இல் திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவள்ளூா், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.16-இல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களிலும், அக்.17-இல், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை: அதே சமயம் அக்.16-ஆம் தேதி திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை (204 மில்லி மீட்டருக்கும் அதிகம்) பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024