Friday, September 20, 2024

வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்புமா? இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் திருத்தம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்புமா? இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் திருத்தம்வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்புமா? இடஒதுக்கீட்டில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு..படம் | பிடிஐ

வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டில் மாணவா் போராட்டம் வெடித்தது.

அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் தேதி அறிவித்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.

வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் மேற்கொள்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டத்தில் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் மூண்டது.

இதையடுத்து, வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் வேலைவாய்ப்புகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு இடஒதுக்கீட்டில் 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும், மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இதர பிரிவினருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து போராடிய மாணவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள்கிழமை(ஜூலை 22) வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து நிலைமைக்கேற்ப ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுமென கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை சுமார் 1000 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024