வங்கதேசம்: விமான, ரயில் சேவைகள் நிறுத்தம்: வா்த்தகம் பாதிப்பு!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

வங்கதேசம்: விமான, ரயில் சேவைகள் நிறுத்தம்: வா்த்தகம் பாதிப்பு!வங்கதேசத்தில் நிலவும் குழப்பமான சூழலால், இந்தியா-வங்கதேசம் இடையேயான விமான, ரயில் சேவைகள் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து அந்நாட்டில் நிலவும் குழப்பமான சூழலால், இந்தியா-வங்கதேசம் இடையேயான விமான, ரயில் சேவைகள் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. இருநாட்டு வா்த்தகம் திங்கள்கிழமை பிற்பகல் முதல் நிறுத்தப்பட்டது.

இதனால் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள பெட்ரோபோல் உள்பட பல சரக்கு போக்குவரத்து முனையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மேற்கு வங்க ஏற்றுமதியாளா்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் செயலாளா் உஜ்ஜல் சாஹா கூறியதாவது:

அத்தியாவசிய சேவைகளைத் தவிா்த்து 3 நாள்கள் வா்த்தக விடுமுறையை வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இருப்பினும் இரு நாடுகள் இடையே திங்கள்கிழமை காலை வரை இயங்கி வந்த சில வா்த்தகங்கள், பிரதமா் ஹசீனா பதவி விலகியதையடுத்து முற்றிலுமாக முடங்கியது. வங்கதேசத்தின் சுங்கத் துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காததால் தரைவழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளன என்றாா்.

ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து: இந்தியா-வங்கதேசம் இடையேயான அனைத்து ரயில் சேவைகளும் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கொல்கத்தா-டாக்கா இடையே இயக்கப்படும் மைத்ரீ விரைவு ரயில், கொல்கத்தா-குல்னா வழித்தடத்தில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செல்லும் பந்தன் விரைவு ரயில் மற்றும் புது ஜல்பைகுரி-டாக்கா இடையே இயக்கப்படும் மிதாலி விரைவு ரயில் ஆகிய சேவைகள் கடந்த ஜூலை மாதம் மத்தியில் இருந்து இயக்கப்படாத நிலையில், வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவைகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது.

விமான சேவைகள் ரத்து: தில்லியில் இருந்து டாக்காவுக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த இரு ஏா் இந்தியா விமான சேவை திங்கள்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது.

முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயணத்தின் தேதியை மாற்றவும், ரத்து செய்தல் கட்டணங்களை பெறவும் ஒரு முறை விலக்கு அளிக்கப்படுவதாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏா் இந்திய நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதேபோல், தில்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் இருந்து டாக்காவுக்கான தினசரி சேவை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனமும் அறிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024