Saturday, September 21, 2024

வங்காளதேச போராட்டம் எதிரொலி; பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமா?

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது.

டாக்கா,

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடைமுறையின்படி, வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்றும் புதிதாக மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தூதரகத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் வசித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும். தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது.

அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்து உள்ளது. போராட்டத்தின்போது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த சூழலில், நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு முன், பேச்சுவார்த்தைக்கு வரும்படி மாணவர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும், அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

இந்த சூழலில், வங்காளதேசத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாக்கா மற்றும் பிற பகுதிகளில் வன்முறை பரவி பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024