Wednesday, November 6, 2024

வங்கிக் கடன்! பெற்ற மகனை ரூ. 9,000-க்கு விற்ற அன்னை!

by rajtamil
0 comment 57 views
A+A-
Reset

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பிகார் பெண் ஒருவர், பெற்ற மகனையே விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் அராரியா மாவட்டத்தில் ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசித்துவரும் முகமது ஹரூன்-ரெஹானா கட்டூன் தம்பதி, வறுமை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 50,000 கடன் பெற்றுள்ளனர். இந்த கடனின் தவணையை செலுத்த முடியாததால் தனது குழந்தையை வெறும் ரூ. 9,000-க்கு விற்றுள்ளனர்.

'தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனின் தவணை, கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்ததால் மிகுந்த அழுத்தத்தில் இருந்தேன். தவணையை செலுத்தக்கூறி நிறுவனத்தின் முகவர்கள் எங்களைத் துன்புறுத்தினார்கள். கடனைத் திருப்பிச் செலுத்ததாததால் எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறினர். இதன்பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக குழந்தையை விற்கும்படி என் சகோதரர் தன்வீர் கூறியதால் நான் குழந்தையை விற்க முடிவு செய்தேன்' என்று தாய் ரெஹானா கூறியுள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?

இந்த தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் குர்ஃபான் என்ற ஒன்றரை வயது குழந்தையை விற்றுள்ளனர். ரெஹானாவின் சகோதரர் தன்வீர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்வீரின் வீட்டில் விடப்பட்ட குழந்தை, அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவரிடம் ரூ. 9,000 -க்கு விற்கப்பட்டுள்ளார்.

ஆனால், குழந்தைக்கு ரூ. 45,000 கொடுத்ததாக ஆரிஃப்பின் உறவினர் கூறுகின்றனர். ஆரிஃப்பிடம் இருந்து தன்வீர் எவ்வளவு பெற்றார் என தனக்குத் தெரியாது என்று ரெஹானா, காவல்துறையிடம் தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை விற்க தன்வீரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

ஆரிஃப் அந்த குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு விலை பேசியுள்ளார். குழந்தையை பெங்களூருவுக்கு அனுப்புவதற்கு முன்னதாகவே தகவல் அறிந்த காவல்துறையினர், குழந்தையை ஆரிஃப் வீட்டில் இருந்து பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையின் பெற்றோர் முகமது ஹரூன், ரெஹானா கட்டூன் இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரெஹானா ரூ.9, 000 பணத்துடன் தனது மகனை திரும்பப் பெறுவதற்கு ஆரிஃப்பின் வீட்டிற்குச் சென்றதாக குழந்தையின் உறவினர் அர்சாதி என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஆரிஃப், குழந்தைக்காக ரூ 45,000 கொடுத்ததாகக் கூறி குழந்தையை தர மறுத்ததாகவும் அதன்பின்னர் ரெஹானா, கிராம மக்களிடம் பணம் கேட்டுப் பெற்றதாகவும் கூறினார்.

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள அராரியா மாவட்டத்தில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024