மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது அமர்வாக இன்றும் உயர்ந்து வர்த்தகமானது. பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தை கடைசி இரண்டு மணிநேரத்தில் வலிமை பெற்றது. இதில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கி குவித்ததால் இந்திய பங்குச் சந்தையில் உறுதியான போக்கு நிலவியது.
இதையும் படிக்க: விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 363.99 புள்ளிகள் உயர்ந்து 80,369.03 புள்ளிகளில் நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் இது 583.69 புள்ளிகள் சரிந்து 79,421.35 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 127.70 புள்ளிகள் உயர்ந்து 24,466.85 புள்ளிகளாக உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 5 சதவிகிதம் உயர்ந்தது, அதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்தன.
இதற்கு நேர்மாறாக மாருதி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா ஆகியவை சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,228.08 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,400.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. ஷாங்காய் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.66 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.89 டாலராக உள்ளது.