Monday, September 23, 2024

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி. தினகரன்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே 100 சதவிகிதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்துவரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகரில் எந்தவித ஒருங்கிணைப்புமின்றியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக பொய்கள் கூறுவதும், மழை பாதிப்புக்கு பின்னர் புதுப்புது காரணத்தை சொல்லி சமாளிப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, இம்முறையும் எதாவது காரணத்தைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.

சென்னை மாநகராட்சி சார்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், முறையாக நடைபெறவில்லை என்பதை, அப்பணிகளுக்காக தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும், அதனால் ஆண்டுதோறும் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளுமே உணர்த்துகின்றன.

எனவே, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024