Saturday, September 21, 2024

வயநாடு செல்லும் பிரதமர் மோடி… தேசிய பேரிடராக அறிவிப்பார்..! ராகுல் காந்தி டுவீட்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

புதுடெல்லி,

கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து பிற்பகலில் அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினர் விளக்கம் அளிப்பார்கள். அங்கு மறுவாழ்வுப் பணிகள் எப்படி நடக்கின்றன? என்பதை அவர் பார்வையிடுவார். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். .

இந்நிலையில் வயநாடு செல்லும் பிரதமர் மோடி வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவுகளை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக இன்று வயநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புகிறேன்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024