Friday, September 20, 2024

வயநாடு நிலச்சரிவு: உறவினர்களால் அடையாளம் காட்ட முடியாமல் போன உடல்கள்… இன்று அடக்கம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜி.பி.எஸ். ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள்.

இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உறவினர்களால் அடையாளம் காட்ட முடியாமல் போன 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகளின் பாகங்கள் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக மாநில வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு உடலுக்கும் ஒதுக்கப்பட்ட அடையாள எண் மற்றும் உடல் பாகங்களில் இருந்து மீட்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் புதைகுழிகள் குறிக்கப்படும். சாலியாறு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட ஹாரிசன்ஸ் மலையாள லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான 64 சென்ட் நிலத்தில் தயாரிக்கப்பட்ட கல்லறைகளில் பொதுமக்களின் உடல் அடக்கம் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மோப்ப நாய்களின் சேவை கோரப்பட்டுள்ளது. மேலும் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது" என்று மந்திரி கே.ராஜன் கூறினார்.

முன்னதாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அனைத்து மதத்தினரின் பிரார்த்தனை மற்றும் இறுதி சடங்குகளுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024