வயநாடு நிலச்சரிவு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உடைமைகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளனர். இதில் 24 தமிழர்களும் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

இவர்களது துயர் துடைக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளமை பருவத்தில் பொறியாளர் படிப்பு படித்து சென்னையில் பயிற்சி பெற்று ராணுவ பொறியாளராக பணியில் சேர்ந்த சீதா ஷெல்கே என்பவர் வயநாடு பகுதியில் சூரல்மலை பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற மகத்தான சாதனை புரிந்தது மிகுந்த வரவேற்புக்குரியது.

ராணுவ பொறியாளர் சீதா ஷெல்கே வயநாட்டில் பேரிடருக்கு எதிராக ஒரு ராணுவ வீரராக பணியாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப்லைன் கம்பி மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர் ஜிப் லைன் மூலம் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் இல்லாத நிலையில் துணிச்சலாக செயல்பட்டு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்கியும், நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இவரது சேவை மனப்பான்மை மிக்க துணிச்சலான பணியை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024