Friday, September 27, 2024

வயநாடு நிலச்சரிவு | தேவையான உதவிகள் வழங்க தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவு | தேவையான உதவிகள் வழங்க தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறி வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதைக் குறித்து அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன்.

இன்னமும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிச்சயம் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன்.

நமது சகோதர மாநிலமான கேரளம் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்குத் தேவைப்படும் எந்த விதமான இயந்திரம், பொருள் மற்றும் மனித ஆற்றல் சார்ந்த உதவியையும் வழங்கத் தமிழக அரசு தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: முன்னதாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 42 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

You may also like

© RajTamil Network – 2024