Friday, November 8, 2024

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி : பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் நேற்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு சென்றார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது.

விளம்பரம்

இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாக ஆய்வு செய்தார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர். அப்போது, அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினர். 30 மணி நேரத்தில் பாலம் அமைத்து மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்ட ராணுவ வீரர்களையும் அவர் பாராட்டினார்.

விளம்பரம்

அடுத்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி சென்றார். பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறைகளை கண்கலங்கியவாறு கூறியதைக் கேட்ட பிரதமர், அவர்களின் தோள்களில் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களையும் பிரதமர் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர், பலரின் கனவை வயநாடு நிலச்சரிவு சிதைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் உதவிகள் கேரள அரசுக்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறினார்.

விளம்பரம்

இதையும் படிக்க:“ஆக.15 முதல் அரசு பள்ளி மாணவர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்வது கட்டாயம்” – ஹரியானா பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு இரண்டாயிரம் கோடி நிதியுதவி கோரி இருக்கும் நிலையில், மத்திய அரசின் கூடுதல் உதவிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Landslide
,
PM Modi
,
Wayanad

You may also like

© RajTamil Network – 2024