வயநாடு,
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதன் பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து நிலச்சரிவு தொடர்பாக வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;
"வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவை சிதைத்துவிட்டது. நிலச்சரிவு ஏற்பட்டது முதல், ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வந்தேன். நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.
வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. கேரளாவிற்கு தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும்." என்றார்.