வரலாற்றில் முதல்முறையாக மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது ஜம்மு – காஷ்மீரில்தான்: ராகுல்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது ஜம்மு – காஷ்மீரில்தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெரவுள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார்.

Rahul Gandhi
ராகுல் காந்தி

பாஜக மீது ராகுலின் குற்றச்சாட்டு

ரம்பன் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

“இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. மாநிலம் முதல்முறையாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மாநிலத்தை அழித்து மக்களின் உரிமைகளை பறித்தனர். ஜம்மு – காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து மீண்டும் பெற்றுத் தர வேண்டும். ஏனென்றால், மாநில அந்தஸ்து மட்டும் பறிக்கப்படவில்லை, மக்களின் உரிமைகள், வளங்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக அரசு கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜம்மு – காஷ்மீரில் இன்று மன்னர் ஆட்சி உள்ளது. மன்னர் பெயர் துணைநிலை ஆளுநர்.

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை. தேர்தலுக்கு முன்னதாக மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என்றும், மாநில அந்தஸ்துடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆனால், பாஜகவுக்கு பிடிக்கவில்லை. பாஜக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி பெற்றுத் தரும்.

மோசமான பணிக் கலாசாரம்: மாதவிக்கு எதிராக செபி ஊழியர்கள் புகார்!

ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டனியின் ஆட்சி கண்டிப்பாக வரும். எங்களின் முதல் பணி காலியாகவுள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவது. அரசுப் பணியில் சேருவதற்கான வயதை 40-ஆக உயர்த்துவோம். தினசரி கூலித் தொழிலாளிகளின் பணியை நிரந்தரப்படுத்தி, அவர்களின் வருமானத்தை உயர்த்துவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து அரசை நடத்துவதே எங்களின் குறிக்கோள்.

தேர்தலுக்கு பின்பு நான் இங்கே வர வேண்டும். வெறும் 45 நிமிட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள். இந்த அழகான இடத்தில் குறைந்தபட்சம் 2 – 3 நாள்களாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அனந்த்நாக் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

You may also like

© RajTamil Network – 2024