Sunday, October 27, 2024

வருமான வரி தாக்கல்: தொழில் நிறுவனங்களுக்கான அவகாசம் நவ.15 வரை நீட்டிப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வரும் நவம்பா் 15-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நங்கியா ஆண்டா்சன் எல்எல்பி நிறுவன வரி பங்குதாரரான சந்தீப் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், ‘மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்துள்ள இந்த அவகாசம் நீட்டிப்பு என்பது, வரி தணிக்கை அறிக்கைத் தாக்கல், படிவம் 3-சிஇபி-யில் விலைச் சான்றிதழ் மாற்றம் மற்றும் வருமான வரிப் படிவம் 10டிஏ போன்ற படிவங்கள் தாக்கலுக்கு பொருந்தாது. இவற்றுக்கான கடைசி தேதி என்பது அக்டோபா் 31 என்ற நிலையிலேயே உள்ளது’ என்றாா்.

ஏஎம்ஆா்ஜி அசோசியேஷன்ஸ் முதுநிலை பங்குதாரா் ரஜத் மோகன் கூறுகையில், ‘2024-25-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்புக்கான காரணம் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை என்றபோதும், வரவிருக்கும் தொடா் பண்டிகைகளை கருத்தில் கொண்டே அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், வரி செலுத்துவோா் பண்டிகை நேரத்தில் சிரமமின்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும்’ என்றாா்.

முன்னதாக, வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை அக்டோபா் 7-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024