Friday, September 20, 2024

வழி காட்டிய அங்காளபரமேஸ்வரி

by rajtamil
0 comment 37 views
A+A-
Reset

மயிலாடுதுறை அருகே உள்ள கொருக்கையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வரகடை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்.

சதுர்யுகத்தில் ஆதி கிரேதாயுகத்திற்கு முன் சரஸ்வதியின் சாபத்தால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டும், உலக மக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை அங்காள பரமேஸ்வரி எழுந்தருளிய தலம் தான் மேல்மலையனூர். இந்த அருள் தரும் அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் வரகடை என்ற ஊரில் உள்ளது. அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?

அன்னையின் அவதாரம்

தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு முறை பிரம்மன் கயிலாயம் சென்றபோது பார்வதி அவரைத் தொலைவில் இருந்து பார்த்தாள். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்றெண்ணினாள் பார்வதி. பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.

இதையறிந்த சரஸ்வதிக்கு கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவிலா சினம் கொண்டாள்.

"நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக" என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி "இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக" என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களின் நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களது சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்தாள். மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தனது காலால் மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாள். சிவபெருமானின் தோஷம் நீங்கியது.

இன்னொரு கதை

அங்காள பரமேஸ்வரி பற்றிய இன்னொரு கதையும் உண்டு. மாபெரும் யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினான் தட்சன். அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தட்சன், சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை.

தன் தந்தையான தட்சனின் செயலைக் கண்டு கோபமடைந்த பார்வதி நேரே தட்சனிடம் சென்றாள். தாட்சாயணியான தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தர வேண்டும் என தந்தையிடம் போராடினாள். தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர மறுத்தான் தட்சன். சினம் கொண்ட பார்வதிதேவி, தட்சனை சபித்தாள். அதே வேள்வித் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

நடந்ததை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்ரரும், பார்வதியிடமிருந்து அங்காள பரமேஸ்வரியும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும் தட்சன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை துவம்சம் செய்தார்கள்.

அங்காள பரமேஸ்வரி

எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் அமைந்திருக்கிறது.

வரகடையில் உள்ள அன்னை அங்காள பரமேஸ்வரியின் ஆலயம் சிறியது தான். கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி நான்கு கரங்களுடன், புன்னகை தவழும் இன் முகத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். காலடியில் அசுரர்கள் காட்சி தருகிறார்கள். பாவாடைராயன், பூரண- புஷ்கலை சமேத ஐயனார், மடியில் பெண் சிசுவுடன் பெரியாச்சி, அமர்ந்த கோலத்தில் காட்டேரி, விநாயகர், கருப்பண்ணசாமி, சண்டீசர், வீரபத்ரர் ஆகியோரின் திருமேனிகளை இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.

சயத்துவசன் என்னும் சோழ மன்னனின் குலதெய்வமாக திகழ்ந்தவள் இந்த அங்காள பரமேஸ்வரி. தற்போது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறாள். குலமக்கள் தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு மகிழ்கின்றனர்.

ஆலயம் உருவான கதை

சயத்துவசன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது தான் இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த ஆலயம் உருவாக என்ன காரணம்?

ஒரு சமயம் சோழ நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடியது. நாட்டில் பல ஆண்டுகளாக மழை இல்லை. மக்கள் உணவுக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டது. மக்கள் மன்னனை வசைபாட தொடங்கினர். 'இந்த அவல நிலையில் இருந்து மீள்வது எப்படி?' என்று அரச குருவிடம் கேட்டான் மன்னன்.

'காசிக்கு சென்று, கங்கையில் நீராடி, விசுவநாதரையும் அன்னபூரணியையும் வழிபட்டு வந்தால் இந்த நிலை மாறும்' என்றார் குரு.

மன்னன் காசிக்கு புறப்பட்டுச் சென்றான். குரு சொன்னபடி காசியில் இறைவனையும், இறைவியையும் தரிசனம் செய்து ஊர் திரும்பினான்.

ஒருநாள் அவன் கனவில் அன்னபூரணி தோன்றினாள். 'உன் நாட்டில் அரிதகி வனம் என்ற தலத்தில், கங்கையைவிட சிறந்த தீர்த்தக் கரையில் யோகீசப் பெருமான், ஞானாம்பிகையுடன் தரிசனம் தருகிறார். அங்கே சென்று சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தால் உன் கவலை யாவும் கரையும்' என்றாள் அன்னபூரணி அன்னை.

மன்னருக்கு இடம் சரியாக தெரியவில்லை. அதை உணர்ந்து கொண்ட அன்னபூரணி, 'யோகீசர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லையா?. கவலையை விடு. உன் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரியை உன்னுடன் அனுப்புகிறேன். உன் முன்னால் அங்காள பரமேஸ்வரி மணியோசை ஒலிக்க நடந்து செல்வாள். எந்த இடத்தில் மணியோசை நிற்கிறதோ, அங்குதான் யோகீசர் இருக்கிறார் என்று பொருள்' என்று கூறினாள்.

அன்னபூரணி சொன்னபடியே முன்னே அங்காள பரமேஸ்வரி நடக்க, மன்னன் பின்தொடர்ந்து சென்றான். லிங்க உருவில் யோகீஸ்வரர் அருள் பாலிக்கும் அரிதகிவனம் வந்தவுடன் ஓர் ஒளி வெள்ளம் தோன்ற, அங்காள பரமேஸ்வரி மறைந்து போனாள்.

அந்தப் பகுதியில் இருந்த சூலத் தடாகத்தில் நீராடிய மன்னன், தினமும் யோகீஸ்வரரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டான். ஒரு நாள், அரிதகி வனத்தின் வடக்கு பகுதியில் பாயும் ஞானமா நதிக்கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபடும்படி ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி மன்னன் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அன்றைய அரிதகி வன ஆலயம் இன்றைய திருக்குறுக்கை என்று அழைக்கப்படுவதாகும். ஞான நதிக்கரை இன்றைய பழவாறு. மன்னன் அங்கு பிரதிஷ்டை செய்த லிங்கம் தான் விருந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் விருந்தீஸ்வரர் ஆலயம்.

தன் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு அந்த ஆலயத்தின் அருகிலேயே ஊர் எல்லையில் ஓர் ஆலயம் கட்டி வழிபட்டான் மன்னன். அதுவே வரகடை அங்காள பரமேஸ்வரி ஆலயம். சோழ நாட்டில் சுபிட்சம் தலை தூக்கியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்திலும் செல்வ செழிப்பிலும் திளைத்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள கொருக்கையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வரகடை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதியும் ஆட்டோ வசதியும் உள்ளது.

தன்னை நாடிவரும் பக்தர்களின் அனைத்து குறைகளை களைந்து அவர்களை நிம்மதியோடும் மகிழ்வோடும் வாழ வைப்பதில் அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு நிகர் இல்லை என்பது நிதர்சனமான உண்மையே.

You may also like

© RajTamil Network – 2024