வாக்கு எண்ணிக்கை: தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 51 views
A+A-
Reset

தமிழகத்தில் 39 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சென்னை,

543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாளை முதல் நாளை மறுநாள் வரை வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024