Monday, September 23, 2024

வால்பாறை நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பொள்ளாச்சியில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

பொள்ளாச்சியில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த திருமதி.ராஜேஸ்வரி (எ) முத்து (வயது 57) க/பெ. ஆறுமுகம் மற்றும் செல்வி தனப்பிரியா (வயது 15) தா/பெ. சுகுணா ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்கு சொந்தமான ஒட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று (30.07.2024) அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த திரு.ஹரிஹரசுதன் (வயது 21) த/பெ.அன்பழகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த இருவேறு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024