வாழ்வை சிறப்பாக மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

சப்த மாதாக்களில் முக்கியமான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

சப்த கன்னியர்கள் அல்லது சப்த மாதாக்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராகி. அந்த அன்னையை மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் பெண் வடிவம் என்றும் சொல்வதுண்டு. சைவம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வாராகியை வழிபடுகின்றனர்.

எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராகி விளங்குகிறாள். வாராகி அம்மனுக்கு தனிக் கோவில்கள் என்பது அதிகம் கிடையாது என்றாலும், வாராகி அம்மனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராகிக்கு தனி சன்னதி உள்ளது.

யார் இந்த வாராகி?

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தேவியின் (அன்னை பராசக்தி), சேனை நாயகிகள் நால்வர் உண்டு. சம்பத்கரீ, அச்வாரூடா, மந்த்ரிண்யம்பா, தண்டநாதா ஆகியோரே அவர்கள். இவர்களில் சம்பத்கரீ என்பவள், லலிதா தேவியின் அங்குசம் என்ற ஆயுதத்தில் இருந்து தோன்றியவள். இவள் யானைப் படைக்கு தலைவி ஆவாள். அச்வாரூடா என்ற தேவி, பாசத்தில் இருந்து தோன்றியவள், இவள் குதிரைப் படைக்கு தலைவியாக விளங்குகிறாள். மந்த்ரிண்யம்பா என்ற தேவியானவள், ஸ்ரீ லலிதா தேவியின் ஆலோசனைக்குரிய தலைவி.

இவர்களில் நான்காவது தேவியான தண்டநாதா, ஸ்ரீ லலிதா தேவியின் பாணத்தில் இருந்து தோன்றியவள். இவர் ஸ்ரீ லலிதா தேவியின் சக்தி சேனை அனைத்துக்கும் தலைவியாக (போர்ப்படை தளபதி) இருக்கிறாள். இவளையே நாம் 'வாராகி' என்று அழைக்கிறோம். இவளுடைய சக்கரத்திற்கு 'கிரி சக்கரம் என்று பெயர். இந்த தேவியின் வாகனமான சிம்மத்திற்கு 'வஜ்ர கோஷம்' என்று பெயர். இது மூன்று யோசனை தூர உயரம் கொண்டது. பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமயசங்கேதா, வாராகி, போத்ரினீ, சிவா, வார்த்தாளி, மகா சேனா, ஆஞ்ஜா சக்ரேஸ்வரி, அரிக்னீ ஆகிய 12 பெயர்கள் இந்த தேவிக்கு உண்டு. இவள் பண்டாசுரனுடைய கையில் இருந்து தோன்றிய விசுக்ரன் என்ற அரக்கனை அழித்தவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி வசிக்கும் இடமான ஸ்ரீநகரத்தில், 16-வது பிரகாரத்தில் தண்டநாதா வீற்றிருக்கிறாள். இந்த பிரகாரமானது, மரகதமயமானது. இவள் நூறு தூண்கள் கொண்ட மண்டபத்தில், பொன் தாமரையில் அமர்ந்துள்ளாள். உருக்கிய பொன் போன்ற மேனியைக் கொண்டவள். செந்நிற ஆடை அணிந்து, சர்வ ஆபரணங்களையும் அணிந்து அழகுடன் தோன்றுபவள். இவளது 8 கரங்களிலும் சங்கு, சக்கரம், அபயம், வரதம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் ஆகியன உள்ளன. அதோடு தன்னுடைய தலையில் சந்திரக் கலையை சூட்டிக் கொண்டு வராக முகத்துடன் காட்சி தருகிறாள். இவளுக்கு உன்மத்த பைரவி, ஸ்வப்னேசீ, திரஸ்க்ருதி, கிரிபதா தேவி ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

வாராகியின் பெருமையைப் பற்றி 'வரக தந்ரம்' என்னும் மந்திர சாஸ்திர நூல் சிறப்பாக பேசுகிறது. அம்பிகையின் கையில் கரும்பு வில்லாக திகழ்பவள், சியாமளா. புஷ்ப பாணமாக இருப்பவள் வாராகி. எல்லா விதமான சக்திகளும் சியாமளா, வாராகிக்கு உட்பட்டே இயங்குகின்றன. இவர்களுக்கு தனித்தனியான ரதங்கள் உண்டு. அம்பிகைக்கு எப்படி ஸ்ரீ சக்கர ராஜ ரதம் உள்ளதோ, அது போல் வாராகிக்கு, ஆறு ஆதாரங்களும் ரதமாக இருக்கின்றன. வாராகியின் ரதத்திற்கு 'கிரி சக்கர ரதம்' என்று பெயர்.

பஞ்சமி திதி வழிபாடு

ஸ்ரீ வித்யா உபாசனையில் கணபதியை வழிபட்டு, பின் பாலா மந்திர உபதேசம் செய்த பிறகு, சியாமளா மற்றும் வாராகி மந்திரங்களை சொல்ல வேண்டும். வாராகி மந்திரத்தை உச்சரித்த பின்னரே, பஞ்சததி மந்திரத்தை சொல்வது சரியானது.

சப்த மாதாக்களில் முக்கியமான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.

வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், இந்த தேவிக்கு சிறப்புக் குரிய நைவேத்தியங்கள்.

வாராகி கோவில்

காசியில் அமைந்துள்ள வாராகி அம்மன் கோவிலும், நேபாள மாநிலம் போக்ராவில் அமைந்துள்ள வாராகி கோவிலும், வாராகி அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றவை. காசியில் உள்ள வாராகி கோவிலில் காலை 8 மணிக்கு மேல் தரிசனம் செய்ய முடியாது. போக்ராவில் உள்ள வாராகி கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயம் ஏரியின் நடுவில் தீவு போல அமைந்துள்ளது. எனவே இதனை 'தால் வாராகி' என்று அழைக்கின்றனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு .. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024