Sunday, September 22, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 42 கிராமங்கள்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

விக்கிரவாண்டியில் அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இறுதிக்கட்ட பிரசாரம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) ஓய்கிறது. இதையொட்டி தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலை பொறுத்தவரை தி.மு.க.- பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தி.மு.க. தரப்பில் 15 அமைச்சர்கள், 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பா.ம.க. தரப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரு கட்சியினருக்கிடையே பிரசாரம் மேற்கொள்வதிலும், வாக்கு சேகரிப்பின்போதும் கடந்த சில நாட்களாக ஒரு சில கிராமங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு கட்சியினரும் பிரசாரம் மேற்கொள்ளும் முக்கிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின்போது பிரச்சினை ஏற்பட்ட பகுதிகளான ஆசூர், தொரவி, பகண்டை, லட்சுமிபுரம், ஒரத்தூர், சிந்தாமணி, எசாலம், பிரம்மதேசம், கொசப்பாளையம், பனையபுரம், அன்னியூர், சி.என்.பாளையம், மேல்காரணை, கடையம், பாப்பனப்பட்டு உள்ளிட்ட 42 கிராமங்களை போலீஸ் தனது பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் தி.மு.க., பா.ம.க.வினர் பிரசாரம் மேற்கொள்ளும் சமயங்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை பிரிவு மற்றும் உளுந்தூர்பேட்டை பட்டாலியன், சென்னை பட்டாலியன் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த கிராமங்களில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024