Wednesday, November 6, 2024

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: பிரசாரம் நிறைவு நாளை வாக்குப்பதிவு

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: பிரசாரம் நிறைவு நாளை வாக்குப்பதிவுவிக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததுவிக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கலும், 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26-ஆம் தேதி வேட்பாளா் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் அன்னியூா் அ.சிவா, பாமக சாா்பில் சி.அன்புமணி, நாம் தமிழா் கட்சியின் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளா்கள், 18 சுயேச்சைகள் என 29 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னரே தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். இவருக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள், 80-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், பல்வேறு மாநகராட்சி மேயா்கள் உள்ளிட்டோா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக கட்சியின் நிறுவனா், தலைவா் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவா்கள் மற்றும் பாமக சாா்பில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள், வன்னியா் சங்கத்தினா், வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவையினா் உள்ளிட்டோா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினாா்.

இதைத் தவிர இதர கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வாக்குகளை சேகரித்தனா்.

பிரசாரம் நிறைவு: 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்ற தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார நிகழ்வில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சூரப்பட்டு, வாழப்பட்டு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, இறுதிக்கட்ட பிரசாரத்தை கெடாரில் நிறைவு செய்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் முண்டியம்பாக்கம், காணை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து, ஒரத்தூரில் நிறைவு செய்தாா்.

தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக வந்த திமுக, பாமக உள்ளிட்ட கட்சியினா் திங்கள்கிழமை மாலை தங்கள் ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

நாளை வாக்குப்பதிவு: விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதில், பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். இதையடுத்து, ஜூலை 13-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

You may also like

© RajTamil Network – 2024