“விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஓர் ஏமாற்று வேலை; ஏனெனில்…” – ஹெச்.ராஜா தாக்கு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

“விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஓர் ஏமாற்று வேலை; ஏனெனில்…” – ஹெச்.ராஜா தாக்கு

கோவை: “திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என முதல்வருக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? எனவே, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை” என கோவையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவையில் இன்று (செப்.17) பாஜக சார்பில் ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்த போது, ‘மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடியானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால், நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் சரியான நேரத்தில் பணி செய்ய முடியவில்லை’ என கூறியிருந்தார்.

தமிழக பாஜகவில் ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுது பார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இத்திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்துகிறது. தமிழக அரசு இத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இத்திட்டத்தில் சாதி வந்து விடும், அதனால் இத்திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறுகிறார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு முதல்வருக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? எனவே, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை. மாநில அரசு 500 மதுக்கடைகளை மூடியுள்ளோம் என்கின்றனர். ஆனால், 1,000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லா விதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை. பிஹாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு சாத்தியம்.

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பாக கேள்விகள் கேட்க வேண்டாம். கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு எடுக்கும். எங்களோடு உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற தகுதி இல்லாதவர், நான் காலாவாதியாகிவிட்டேன் எனக் கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். காலாவதியான அவர், தனது மகன் இறந்ததால் எம்எல்ஏ-வாகி உள்ளார். அவர் தனது வாயை மூடியிருக்க வேண்டும்.

பன், ஜிலேபிக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம்தான். ஜிஎஸ்டிக்கு பிறகு பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜாப் வொர்க்கிற்கு ஜிஎஸ்டிக்கு முன்பும் வரி இருந்தது. ராகுல் காந்தி அமெரிக்கா சென்று இந்தியாவுக்கு விரோதமாக பேசி வருகிறார்” என்றார் ஹெச்.ராஜா. பேட்டியின் போது, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், துணைத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024