Friday, November 8, 2024

விஜய் அரசியல் வருகை திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மதுரை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை புதுராமநாதபுரம் சாலை பகுதியில் கட்டப்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய கே.பாலகிருஷ்ணன், "இந்தியா, தமிழகத்தில் சோசலிசத்தை அமைக்க பாடுபட்டு வருகிறோம், பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முயற்சிக்கிறது, தமிழக மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகும் கூட மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது. வஃக்பு வாரிய சட்டத்தை அமுல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், சாதாரண போராட்டத்திற்கு கூட காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை, காவல்துறை தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ளதா? இல்லையா? என கேள்வி எழுகிறது. தமிழகத்தில் காவல்துறை சித்திரவதைகள் அதிகரித்து வருகிறது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும், தமிழக அரசு ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது, அதே வேளையில் மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிட விரும்பவில்லை, மக்கள் பிரதிநிதிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

இதையும் படிக்க |திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள்: உதயநிதி ஸ்டாலின்

சலசலப்பை ஏற்படுத்தாது

தமிழகத்தில் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். விஜய் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தியுள்ளார். விஜயகாந்த் கட்சி தொடங்கும் போது பலமடங்கு கூட்டம் வந்தது.விஜய்க்கு அதைவிட குறைவுதான். விஜய் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்க்காக கருத்து சொல்ல முடியாது. விஜய் களத்திற்கு வந்த பின்னர் தான் கருத்து சொல்ல முடியும். மேலும் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அறிவிப்புகள் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது. இது குறித்த கருத்துகளை திமுக கூட்டணியில் உள்ளவர்கள் மிக தெளிவாக கூறிவிட்டனர்.

கருத்து வேறுபாடுகளுடன் பயணிக்கிறோம்

மக்கள் பிரச்னைகளுக்காக திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுடனும் பயணித்து வருகிறோம். கூட்டணிக்குள் இருப்பதால் சாம்சங் பிரச்னையில் தலையிடாமல் இருக்க முடியுமா?, தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். ஆகவே இதற்கும், அதற்கும் சம்பந்தமுமில்லை.

திமுக கூட்டணியை உடைக்க முடியாது

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை அவர் தான் விளக்க வேண்டும், அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என்பதே தவறானது, கூட்டணிக்கு வந்தால் தான் பதவி என்றால் பதவிக்காக கூட்டணிக்கு வருவது போல ஆகிவிடும். கூட்டணியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் கோஷம் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்திவிட போகிறது. பாஜகவை எதிர்க்கும் நிலைபாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, பதவி தருகிறோம் என சொன்னால் கூட திமுக கூட்டணியை உடைக்க முடியாது, விஜய்க்கு யாரோ சொல்லி எழுதிக் கொடுத்தை அவர் மேடையில் பேசியுள்ளார் என அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024