விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாபடும் நிகழ்வு என்றால் அது விநாயகர் சதுர்த்தி விழா தான். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு விநாயகரை தரிசித்து வருகின்றனர். மேலும் தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

ஏஐ மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

மணக்குள விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 20 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் 20000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

வண்ண வண்ண விளக்குகளாலும், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோயிலுக்கு வந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. சாமி தரிசனம் செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுபோன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024