வினேஷ் போகத் நடத்தியது போராட்டம் அல்ல; அரசியல் சதியே: பிரிஜ் பூஷண் சிங்

by rajtamil
Published: Updated: 0 comment 17 views
A+A-
Reset

வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இணைந்தது திட்டமிடப்பட்ட அரசியல் சதிதான் என்று பாஜக தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷணுக்கு எதிரான, கடந்தாண்டு தொடங்கப்பட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

இந்த நிலையில், இருவரும் காங்கிரஸில் இணைந்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது,

திட்டமிடப்பட்ட சதியாலான போராட்டம்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஜனவரி 18 ஆம் தேதியில், இந்த இரண்டு விளையாட்டு வீரர்களும் ஒரு சதித்திட்டத்தைத் தொடங்கினர். அந்த நாளிலேயே, இவையனைத்தும் ஒரு அரசியல் சதி என்று நான் கூறியிருந்தேன். இதில் காங்கிரஸ் சம்பந்தப்பட்டிருந்தது; தீபேந்தர் ஹூடாவும், பூபேந்தர் ஹூடாவும் சம்பந்தப்பட்டிருந்தனர். அதற்கான முழு திட்டமிடலுடன்தான் போராட்டம் போன்று நடத்தப்பட்டது.

பின்னணியில் காங்கிரஸ்

உண்மையில், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம் அல்ல. இந்த நாடகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பது, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகியுள்ளது.

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணியில் பூபேந்தர் ஹூடாதான் உள்ளார். தீபேந்தர் ஹூடா, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் இதன் பின்னணியில் இருந்தனர்.

புரியும்படி சொன்னால், இது காங்கிரஸின் இயக்கம். இந்த முழு இயக்கத்திலும், எங்களுக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தில், பூபேந்தர் ஹூடாதான் தலைமை தாங்கினார்.

அவர்களால் ஹரியாணாவின் மகள்களுக்குதான் சங்கடம்

பூபேந்தர் ஹூடா, தீபேந்தர் ஹூடா, பஜ்ரங், வினேஷ் ஆகியோர் மற்ற வீராங்கனைகளுக்காக போராட்டத்தில் அமரவில்லை என்பதை ஹரியானா மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். தற்போது, அவர்கள் காரணமாக, ஹரியாணா மகள்களான வீராங்கனைகள்தான் சங்கடத்தை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல; பூபேந்தர் ஹூடா, தீபேந்திர ஹூடா உள்ளிட்ட இந்த போராட்டக்காரர்கள்தான் பொறுப்பு.

அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வீராங்கனைகள்

குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் நான் தில்லியில் இல்லை என்பது நிரூபிக்கப்படும் நாளில், அவர்கள் என்ன பதிலளிப்பார்கள்? அவர்கள் மற்ற வீராங்கனைகளை அரசியலுக்கு பயன்படுத்தினர்; தங்களுக்காக வீராங்கனைகளை அவதூறு செய்தனர்.

வீராங்கனைகளின் கௌரவத்திற்காக அவர்கள் போராடவில்லை; அரசியலுக்காகதான் போராடினர்.

ஏஐ மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதுமட்டுமின்றி, பிரிஜ் பூஷண் வெள்ளிக்கிழமையில் தெரிவித்ததாவது, “ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஹரியாணாவில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் அவர்கள் போட்டியிடலாம்; ஆனால் ஒரு சிறிய பாஜக வேட்பாளரே அவர்களை தோற்கடித்து விடுவார்.

எனது கட்சி கூறினால், ஹரியாணா தேர்தலில் பிரசாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஏன் அவர்களின் சமூகத்திலிருந்துகூட வலுவான ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரும் போர்வையில், பல காங்கிரஸ் தலைவர்கள் போராட்டங்களில் சேர்ந்தனர். மல்யுத்த வீரர்களை அவர்களின் சிப்பாய்களாக மாற்றி விட்டனர்.

மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்த காங்கிரஸ், இந்த நாட்டில் மல்யுத்தத்திற்கான மதிப்பை குறைபடுத்தி விட்டது’’ என்று கூறியிருந்தார்.

காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே, வருகிற அக்டோபரில் நடைபெறும் ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் வேட்பாளராக போகத் அறிவிக்கப்பட்டார். பஜ்ரங் புனியாவுக்கு இந்திய விவசாய காங்கிரஸின் செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது.

ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024