விமான நிலையத்திற்கு இணையான பாதுகாப்பு வேண்டும்; பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. கடிதம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது, அந்த மருத்துவமனை சூறையாடப்பட்டது. இதனால், தடயங்கள் பல அழிக்கப்பட்டு உள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த விவகாரத்தில், டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதன்படி, இன்று காலை 6 மணி தொடங்கி, நாளை காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டது.

இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த விவகாரம் பற்றி இந்திய மருத்துவ கூட்டமைப்பின் (ஐ.எம்.ஏ.) தலைவர் அசோகன் கூறும்போது, நாங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவோம். அவர் தலையிடுவதற்கான காலம் கனிந்துள்ளது என்றார்.

பிரதமர் மோடி, சுதந்திர தின உரையின்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பேசிய டாக்டர் அசோகன், இந்த விவகாரத்தில் அவர் கவனம் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த காரணம் ஒன்றே போதும் என்று கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சொத்துகளை சேதப்படுத்துவதில் இருந்து தடுக்கும் வகையில், அதற்கான சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள பாதுகாப்பு நடைமுறையானது விமான நிலையத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இதேபோன்று மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். பாதுகாப்பு உரிமையானது கட்டாயம் என்பதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். சி.சி.டி.வி.க்கள், பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்துவது மற்றும் அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படலாம்.

பெண் டாக்டருக்கு 36 மணிநேர பணி மற்றும் ஓய்வு எடுக்க பாதுகாப்பான இடம் பற்றாக்குறையாக இருந்துள்ளது. பயிற்சி டாக்டர்களுக்கு போதிய ஓய்வறைகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

பயிற்சி டாக்டர்களுக்கு பணி செய்ய மற்றும் வாழ்வதற்கான சூழ்நிலைகள் முழு அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் சம்பவம் பற்றி விசாரணை செய்து, குறிப்பிட்ட காலஅளவுக்குள் நீதி வழங்க வேண்டும்.

கொடூரம் இழைக்கப்பட்டதற்கு இணையாக, அதனை கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முறையான மற்றும் கண்ணியமிக்க இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024