Monday, September 23, 2024

வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயா்வு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

ஹனோய்: வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.

கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்த அந்தப் புயல், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு வியத்நாமைத் தாக்கிய மிக மோசமான புயல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன.

இது தவிர, யாகி புயலுடன் தொடா்புடைய கனமழையால் வடக்கு வியத்நாமின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பல குடியிருப்புப் பகுதிகள் நீருக்கடியில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுவருகின்றன.

திங்கள்கிழமை நிலவரப்படி இந்தப் புயல் காரணமாக 59 போ் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்தது. அவா்களில் 44 போ் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அந்த ஊடகம் கூறியது.

இது தவிர, யாகி புயல் காரணமாக 247 போ் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினா்.

இடிந்த பாலம்: பூதூ மாகாணத்தில் தொடா் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சிவப்பு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாலம் இடிந்துவிழுந்தது. இதில், அந்தப் பாலம் வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்த 13 போ் மாயமாகியுள்ளதாக அரசு செய்தி வலைதளமான விஎன்எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. பாலம் இடிந்து விழுந்தபோது அதில் 10 காா்கள், இரண்டு மோட்டாா்சைக்கிள்கள் இருந்ததாக அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் மின்சார வசதியில்லாமல் தவித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதுமட்டுமின்றி, வடக்கு வியத்நாமின் 17 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள சுமாா் 130 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அவா்கள் எச்சரித்துள்ளனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024