விராட் கோலியால் சச்சினின் சாதனையை உடைக்க முடியாது… ஏனெனில் அவர்.. – ஆஸி. முன்னாள் வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களில் விராட் கோலி தன்னுடைய வேகத்தை இழந்து விட்டதாக பிராட் ஹாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிட்னி,

இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தி பெறுகிறார். அதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவர் உடைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் கோலியை விட ஜோ ரூட் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை நெருங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களில் விராட் கோலி தன்னுடைய வேகத்தை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் 15921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சினை முந்தி உலக சாதனை படைக்கும் வாய்ப்பை விராட் கோலி கிட்டத்தட்ட விட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் 12000 ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் இன்னும் 3519 ரன்கள் குவித்து சச்சினை முந்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அங்கே விராட் கோலி செல்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் வேகத்தை இழந்து விட்டார் என்று நினைக்கிறேன். அவர் வேகத்தை இழந்து கொஞ்சம் வருடங்களாகி விட்டது. எனவே விராட் கோலி அதை அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளில் திருப்ப வேண்டும். இல்லையென்றால் அவர் இன்னும் சரிவை சந்திப்பார். 146 போட்டிகளில் ஜோ ரூட் 12000 ரன்கள் அடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் கிட்டத்தட்ட 16,000 ரன்கள் அடித்துள்ளார். அதை தொடுவதற்கு ஜோ ரூட் இன்னும் 66 போட்டிகளில் 4000 ரன்கள் அடிக்க வேண்டும். எனவே ஜோ ரூட் அந்த சாதனையை நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். சச்சினின் அந்த சாதனையை ரூட் உடைப்பாரா என்று நாம் பார்க்க வேண்டும். அந்த தனித்துவமான சாதனையை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனதில் இருக்கும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Related posts

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா-வங்காளதேசம் 2வது டெஸ்ட்; ஈரமான அவுட் பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்